ஞானாலயா ஒரு வித்தியாசமான தமிழ் ஞானப் பணி!

தமிழ் நாட்டில் ஞானாலயா ஒரு வித்தியாசமான தமிழ் ஞானப் பணி! – முனைவர். செ. அ. வீரபாண்டியன் –

பாரதியாரின் கவிதைகளில் அச்சில் வெளிவந்த முதல் கவிதை “தனிமை இரக்கம்’. அக்கவிதை வெளிவந்த இதழ் “விவேக பானு’. 1842 ஆம் வருடத்தில் வெளிவந்த நூல் வீரமாமுனிவரின் சதுரகராதி. 1850 ஆம் வருடத்தில் வெளிவந்த நூல் தமிழ் – இலத்தீன் – பிரெஞ்சு அகராதிகள் இவ்வாறு தமிழில் அச்சில் முதலில் வெளிவந்த நூல்களைத் தேடிக்கொண்டு வந்து பாதுகாத்து, ஆர்வமுள்ளவர்களுக்குப் படிக்க உதவும் இடமே தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் உள்ள ஞானாலயா ஆகும். பாரதிதாசன், பெரியார், அண்ணா, உ.வெ.சா உள்ளிட்ட பலர் சம்பந்தப்பட்டப் படைப்புகளில் முதல் பதிப்பில் இருந்தவை எவை, அவற்றுள் பிந்தைய பதிப்புகளில் விடுபட்டவை எவை என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் இடம் ஞானாலயா. ஏன் அவை விடுபட்டன, பெரியார் நடைமுறைப் படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அவருக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் யார், 1908 இல் வெளிவந்த பாரதியாரின் “ஸ்வதேச கீதங்கள்’ கவிதை நூலில் மதுரை ஸ்ரீ முத்துக்குமாரபிள்ளையின் கவிதை ஏன் இடம் பெற்றது உள்ளிட்ட அரிய விளக்கங்களை ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தியிடம் பெறலாம்.

தமது மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரிப் பேராசிரியர் பணிகளிலிருந்து ஒய்வு பெற்றுள்ள பா.கிருஷ்ணமூர்த்தி – டோரதி கலப்பு மணத் தம்பதியினர் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து, தமது சேமிப்பில், உருவாக்கிப் பாதுகாத்துவரும் தனியார் நூலகமே ஞானாலயா. ரூபாய் பத்து லட்சம் செலவில் 1800 சதுர அடியில் அமைந்துள்ள இந்நூலகத்தில் அரிய நூல்கள் மட்டுமின்றி, முக்கிய ஆவணங்களும், அரிய புகைப்படங்களும், பிரசுரமாகாத பிரபல அறிஞர்களின் கையெழுத்துக் கடிதங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்துள்ள சுமார் 500க்கும் அதிகமான மறுபதிப்புகளின் மூலநூல்கள் ஞானாலயாவிடமிருந்தேப் பெறப்பட்டன. சக்தி கோவிந்தன் இலக்கியப் படைப்புகளை நாட்டுடைமையாக்கி, வறுமையில் உழன்ற அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிதி உதவக் காரணமாக இருந்தது ஞானாலயா. சுந்தர ராமசாமி தன் கதைத்தொகுப்பு முயற்சியின்போது தன்னிடமில்லாத பல கதைகளை பெற்ற இடம் ஞானாலயா.

ஆரவாரமின்றி அமைதியாக இது போன்று பல தமிழ்ஞானப் பணிகளை பா.கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதியினர் ஆற்றி வருவதைக் கண்ணுற்ற தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் கீழ்வரும் கருத்தினைப் பதிவு செய்துள்ளார். ” எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் கிருஷ்ணமூர்த்தி-டோரதி தம்பதியருக்கு பத்மபூஷன் விருது கிடைக்கச் செய்திருப்பேன்.”. பத்மபூஷன் விருது என்பது இந்திய அரசின் உயர்ந்தபட்ச விருதாகும்

ஞானாலயாவுக்கு வருகை தரும் ஆய்வாளர்களுக்கு தங்கும் இடமும் உணவு வசதியும் ஏற்பாடு செய்துதரப் படுகின்றன.

விரும்பித்தரும் நன்கொடைகளைக் கொண்டு ஞானாலயாவினை நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் விரிவுபடுத்தும் முயற்சியிலும், தங்கள் காலத்திற்குப் பின்னும் இத்தமிழ்ஞானப் பணிகள் தொடர ஞானாலயாவை ஒரு பொது அறக்கட்டளையாக மாற்றும் முயற்சிகளிலும் கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர்.

ஞானாலயா முகவரி:

ஞானாலயா ஆய்வு நூலகம்,
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம் அஞ்சல்,
புதுக்கோட்டை, 622002 இந்தியா
தொலைபேசி: +91 4322221059.

Gnanalaya Research Library,
6, Pazhaniyappa Nagar, Thirukkokarnam,
Pudukkottai, 622002, India.
Phone: +91 4322221059.

ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் வேண்டும் என்ற வேண்டுகோள் பலராலும் நீண்டகாலமாகவே பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் பதிவுகள் இணைய தளத்தில் 2007 நவம்பர் இதழில் வெளிவந்த ஒரு சிறு கட்டுரை.இங்கே பதிவுகள்,வ ந கிரிதரனுக்கும் கட்டுரை எழுதிய முனைவர். செ. அ. வீரபாண்டியன் இருவருக்கும் நன்றியுடன்!
http://www.geotamil.com/pathivukal/gnanalaya_research_library.htm

இந்திய மாணவர் சங்கம்

ஈரோடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துயிருந்த போது கையில் காகிதத்தோடு
சில மாணவர்கள் எங்களை நோக்கி வந்தார்கள்.அவர்கள் இந்திய மாணவ சங்கத்தை சார்ந்தவர்களாம்.
அவர்கள் பேசியது மாணவனாகிய என்னையும் ஈர்க்கத்தான் செய்தது.ஆகையால் மாணவன் ஆகிய
நானும் என் பங்கை செய்ய ஆசைப்படுகிறேன்.அவர்கள் பேசியது இங்கே கூறிப்பிட்டு உள்ளேன்.

அன்புள்ள மாணவர்களே !
கலர் டிவி முதல் கம்ப்யூட்டர் வரை, அரிசி அரவை இயந்திரம் வரை அனைத்துமே இலவசமாம்.
மக்கள் வரிப்பண்த்தை மக்களுக்கு செலவு செய்வதை குறை கூறவில்லை.இந்தியாவின் எதிர்காலத்தை
நிர்ணயிக்க இன்று கல்வி பயிலும் மாணவனுக்கு கல்வி அறிவு இலவசம் இல்லையாம்.தனியார் பள்ளிகளின்
கட்டணக் கொள்ளையை தமிழக அரசு தட்டிக் கேட்கவில்லை .தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம்
விரித்து கல்வியை வியாபாரம் ஆக்கிக்கொண்டிருக்கிறது.அந்த கல்வி வியாபாரிகளின் செவிட்டு காதுகளில்
நம்மை போன்ற கோடிக்கணக்கான மாணவர்களின் குரல் ஒலிக்க திரண்டு வாரீர் SFI யுடன்.

ஆணும் பெண்ணும் சமுதாயத்தில் சமமாக நடத்தப்படவேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றது.
அதேபோல் ஒவ்வொரு குடிமகனும் உள்ள கல்வி உரிமையை சமமாக வழங்க,அனைவருக்கும் சமமான
கல்வி-சமச்சீர் வழங்க வேண்டும் என்று கடந்த 11 ஆண்டுகளாக மாணவர் சங்கம் போராடி வருகின்றது.
2009 ஜுலை மாதம் அதற்கான மாபெரும் பேரணியை கோட்டையை நோக்கி இந்திய மாணவர் சங்கம் நடத்தியது.
அதற்கு அப்போது ஆண்ட திமுக அரசாங்கம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது தடியடி நடத்தியது,
கை கால்களை உடைத்து,மண்டையைப் பிளந்தது மேலும் வேறுவழியில்லாமல் திமுக அரசு,சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த அரைமனதுடன் ஒப்புக்கொண்டது.மாணவர் சங்கம் ரத்தம் சிந்தி பெற்றுத்தந்த சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவதில் புதிய அரசாங்கம் மெத்தன போக்கினை கடைபிடித்தது,கண்டிக்கத்தக்கதாகும்.

தனியார் பள்ளிகள் சிறப்பு அம்சங்கள் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு,பெற்றோர்களின் இரத்தத்தை பணமாக
உறிஞ்சிக் கொண்டு இருக்கின்றன.அதை தட்டிக்கேட்க வரும் பெற்றோர்களை தனியார் அடிமைகளாக,
பொம்மைகளாக நடத்துகின்றன.

2010-2011 ஆம் கல்வியாண்டில் ,அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.அவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது.இத்தகையை சூழ்நிலையில் ஏழை மாணவர்களின் கல்வியை பாதுகாக்க வேண்டிய பொருப்பு அரசுக்கு உண்டு.எனவே,ஏழை மாணவர்களை பாதிக்கக்கூடிய செயல்களை அரசாங்கம் கைவிட வேண்டும்.

நன்றி : இந்திய மாணவர் சங்கம்